மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
செம்பட்டியை அடுத்த வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 65). நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது உதவி செய்வது போல நடித்த 2 பேர், அவர் அணிந்திருந்த ½ பவுன் தங்க கம்மலை பறித்து சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், வீரபாண்டி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் தோட்டனூத்து பகுதியை சேர்ந்த ராஜ்தனுஷ் (வயது 20), கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (24) ஆகியோர் மூதாட்டியிடம் கம்மலை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு ஒரு வாலிபரிடம், அவர்கள் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.