பட்டுக்கோட்டை அருகே ஆடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகளை திருடும் கும்பல்
பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் கட்டி இருக்கும் ஆடுகளை ஒரு கும்பல் திருடி வந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராசு (வயது 56). விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு சுடுகாடு அருகில் உள்ளது. அந்த தோப்பில் உள்ள கீற்று கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை அவர் தோப்புக்கு சென்று பார்த்த போது அவரது கொட்டகையில் இருந்த ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து அவர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் சுந்தர்ராசு ஆடுகளை திருடி சென்றது அதில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தர்ராசு பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் பழனிவேல் (வயது27), ரகுபதி மகன் சுரேஷ் ( 28) ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.