மணல் கடத்திய 2 பேர் கைது; லாரி பறிமுதல்
மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;
சமயபுரம்:
சமயபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாளாடி, தாளக்குடி, கீரமங்கலம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சமயபுரத்தை அடுத்த தண்டாங்கோரை ரெயில்வேகேட் அருகே எசனைக்கோரை ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர். இதில், அந்த லாரியை ஓட்டி வந்தவர் திருச்செங்கோடு அருகே உள்ள வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த வேலு (வயது 36) என்பதும், தாளக்குடியை சேர்ந்த கனகராஜ், சங்கர், அப்பாஸ், பழனி, முரளி, உசுலு (என்ற) பிரசாத், திலீப், வேல்பாண்டி, கீரமங்கலத்தைச் சேர்ந்த சிவா, கருணாநிதி, மகேந்திரன், கண்ணன் மகன் மணி (21), எசனைகோரையை சேர்ந்த பிரகாஷ், சுப்பிரமணி ஆகிய 14 பேரும் அவர்களுக்கு சொந்தமான மாட்டு வண்டிகளில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை திருடி வந்து, எசனைகோரை வள்ளலார் நகரில் ஒரு இடத்தில் கொட்டி வைத்து இருந்ததும், அந்த மணலை இங்கிருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சோலாரம் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜவேலின் மகன் சிலம்பரசன்(30), அவரது மனைவி பிருந்தா(30) ஆகியோர் லாரிகளில் கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்லாரியை ஓட்டி வந்த வேலு மற்றும் மணியை கைது செய்தனர். மேலும் 7 யூனிட் மணலுடன் டாரஸ் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 14 பேரை தேடி வருகின்றனர்.