கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
படியில் நிற்க வேண்டாம் என கூறிய கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஊட்டி,
ஊட்டி எச்.பி.எப். பகுதியை சேர்ந்தவர் போரன் (வயது 44). மினி பஸ் கண்டக்டர். இவர் ஊட்டியில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் தனியார் மினி பஸ்சில் சொந்த வேலை காரணமாக பயணம் செய்தார். அப்போது மார்க்கெட் பகுதியில் பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்றவாறு பயணித்தார். இதனால் போரன், அந்த வாலிபரை படியை விட்டு மேலே ஏறி வருமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பஸ்சை நிறுத்தி, போரனை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த போரன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், சியாம் சுந்தர் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்டக்டரை தாக்கிய ஊட்டி வி.ஜி.ராவ் காலனியை சேர்ந்த பிராங்க் (24), ஆனந்த் (32) ஆகிய 2 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.