மயிலாப்பூர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
சென்னை மயிலாப்பூரில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.;
கழுத்தை அறுத்து கொலை
சென்னை மயிலாப்பூர் டூமின்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 24-ந் தேதி அன்று இரவு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் உதவி கமிஷனர் சடகோபன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பிரசன்னா பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இது அந்த பெண்ணின் கணவருக்கு பிடிக்கவில்லை. இதையொட்டி ஒரு பகை மூண்டது. இந்த பகை காரணமாக பிரசன்னா கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பிரசன்னாவிடம் பழகி வந்த பெண்ணின் கணவர் டொமினிக் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். முதலில் கூட்டாளி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் 2 பேர் கைது
இந்த நிலையில் டொமினிக்கின் மேலும் இரண்டு கூட்டாளிகளான முருகேசன் (36), லூர்துசாமி (64) ஆகியோரும் நேற்று முன்தினம் கைதானார்கள். டொமினிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.