மணலி புதுநகரில் ஒரே பதிவு எண்ணுடன் ரேஷன் அரிசி கடத்திய 2 மினிவேன்கள் பறிமுதல்

ஒரே பதிவு எண்ணுடன் ரேஷன் அரிசி கடத்திய 2 மினிவேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-07-13 09:31 GMT

மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 மினிவேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த வேன்களில் சோதனை செய்தனர்.

அதில் 2 மினி வேன்களிலும் மூட்டை மூட்டையாக சுமார் 1200 கிலோ அளவுக்கு ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. மேலும் 2 வேன்களிலும் ஒரே மாதிரியான பதிவு எண்கள் இருப்பதால், மர்மநபர்கள் போலியாக ஆர்.சி. புத்தகம் தயாரித்து, அந்த வேன்களில் ரேஷன் அரிசியை கடத்தி வந்துவிட்டு, போலீசார் சோதனைக்கு பயந்து சாலையோரம் நிறுத்தி விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்?, எதற்காக சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றனர்?, எங்கே இருந்து கடத்தி வரப்பட்டது? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 1200 கிலோ ரேஷன் அரிசியுடன் 2 மினிவேன்களையும் பறிமுதல் செய்த போலீசார், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்