மின்னல் தாக்கி 2 பேர் பலி

திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-10-08 18:45 GMT

திருப்பத்தூர்

தேசிய நெடுஞ்சாலை பணி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் அடுத்த மருதங்குடி அருகே பாலத்தில் கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. நேற்று இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இப்பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று மாலையில் அந்த தனியார் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அலுவலராக பணி புரிந்த புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி சித்துபட்டியை சேர்ந்த மதியழகன்(வயது 46), சர்வே மேலாளர் அறந்தாங்கி தாலுகா சுடலைவயல் நிலையூரை சேர்ந்த சரவணன்(33), திட்ட மேலாளர் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள மாலைகண்டான் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (38) ஆகியோர் சென்றனர்.

மின்னல் தாக்கி 2 பேர் பலி

அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மதியழகன், சரவணன், கண்ணன் ஆகியோர் அருகில் இருந்த மரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் திடீரென மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் மதியழகன், சரவணன் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கண்ணன் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் மற்றும் நாச்சியாபுரம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மதியழகன், சரவணனின் உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்