மின்னல் தாக்கி 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் கன மழையால் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர். மரக்கிளை விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் கன மழையால் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர். மரக்கிளை விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
முதியவர் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது60). இவர் ஜவுளி வியாபாரமும், ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று மாலை வழக்கம் போல் இளந்திரை கொண்டான் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது இவர் ஆட்டை அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மின்னல் தாக்கியதில் முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துச்சாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல வெம்பக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது தாயில்பட்டியிலிருந்து சத்திரப்பட்டி வழியாக தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்த செல்லையா (65) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவருடைய பேத்திக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது. ஆதலால் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்ற செல்லையா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதுகுறித்து கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் படுகாயம்
கணஞ்சாம்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டியை சேர்ந்த பாலகுருநாதன் (20 ) என்பவர் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.