லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

வாசுதேவநல்லூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2023-05-20 18:45 GMT

அண்ணாமலை

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவரும், சாம்பவர்வடகரை மேல ரதவீதியை சேர்ந்த மாரியப்பன் (55), அவருடைய மனைவி மாரியம்மாள் (50), தேசியம்பட்டியை சேர்ந்த கனியம்மாள் (70) ஆகியோரும் காரில் விழுப்புரத்துக்கு சென்று விட்டு தேசியம்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை கரடிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளைத்துரை (55) ஓட்டினார்.

ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிந்தாமணி பேரிப்புதூர் ஊருக்கு வடக்கு பக்கம் நேற்று அதிகாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காருக்கு முன்னால் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் உலகநாதன் (35) லாரியை ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் புகுந்ததால் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த அண்ணாமலை பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியப்பன் உள்ளிட்ட மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மாரியப்பன் இறந்தார். மற்ற 3் பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் இறந்த அண்ணாமலை உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், மாரியப்பன் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்