சேந்தமங்கலத்தில் பஸ்- மொபட் மோதல்; 2 பேர் படுகாயம்
சேந்தமங்கலத்தில் பஸ்- மொபட் மோதல்; 2 பேர் படுகாயம்;
சேந்தமங்கலம்:
திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் சேந்தமங்கலம்- ராசிபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சோமேஸ்வரர் பிரிவு சாலை பகுதியில் எதிரே மொபட்டுகளில் வந்த 2 பேர் மீது அந்த பஸ் மோதியது. இதில் அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களில் நடராஜன் (வயது 60) என்பவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் பங்குதாரர் ஆவார். மற்றொருவர் பால் கேனுடன் வந்ததால் அவர் கீழே விழுந்த போது சாலையில் பால் கொட்டி ஓடியது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ்சை வரவழைத்து அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சுமார் 15 நிமிடம் சேந்தமங்கலம்- ராசிபுரம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி அங்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.