காஞ்சீபுரத்தில் 2 போலி டாக்டர்கள் கைது

காஞ்சீபுரத்தில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-19 22:50 GMT

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மருத்துவ துறையும், போலீஸ் துறை யும் இணைந்து மேற் கொண்டு வருகிறது. இது வரை தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது. அவ்வாறு செயல்பட்டு வரும் போலி டாக்டர்கள் மீது போலீஸ் துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

கைது

அதன்படி காஞ்சீபுரம் மாநகர பகுதியிலுள்ள போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்திட காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் கோபிநாத் தலைமையில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் சோதனையில் காஞ்சீபுரம் நிமிந்தகரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லாமல், போலி டாக்டர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலி டாக்டர்கள் இருவரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்