மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்

மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதிய விபத்தில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயமடைந்தனர்.;

Update:2023-10-18 11:45 IST

தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 34). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது தோழியான மாற்றுத்திறனாளி கலைவாணி (38) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 3 சக்கர மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மண்ணடி வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அங்கு சாலையில் நடுவே சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதியது. இதில், ஸ்ரீதேவியும், கலைவாணியும் அருகில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிக்கு போடப்பட்டு இருந்த கான்கிரீட் கம்பி மீது தவறி விழுந்தனர்.

இதில் ஸ்ரீதேவிக்கு கை மற்றும் நெற்றியிலும், பின்னால் அமர்ந்து வந்த கலைவாணிக்கு வயிற்றுப்பகுதியில் கம்பி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் காயத்துடன் விழுந்து கிடந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கொத்தவால்ச்சாவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அப்பகுதியில் பாதாள சாக்கடை மூடி கடந்த சில நாட்களாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதை சீரமைக்காமல் செடி, கற்களை போட்டு மூடி வைத்ததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த பின்னர் அப்பகுதியில் சீரமைக்கப்பட்டு புதிய பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்