திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி வரை வசூலித்து மோசடி செய்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மளிகை கடைக்காரர்
திருப்பூர்-தாராபுரம் ரோடு, செரங்காடு 3-வது வீதியில் வசித்து வருபவர் குமார் (வயது 53). இவரது மனைவி மாரியம்மாள் (52). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்கள் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்தவர் ஆவர். குமார் செரங்காடு பகுதியில் 15 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் 10 ஆண்டுகளாக தீபாவளி பலகார சீட்டு, வார பண்டு சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சந்திராபுரம், பாரதி நகர், செரங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் குமாரிடம் சீட்டு போட்டிருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பலகாரச் சீட்டு போட்டவர்கள் கடந்த அக்டோபர் 25-ந் தேதி முதிர்வு தொகையை வாங்க வந்தனர். அப்போது குமாரின் மளிகை கடை திறக்கப்படவில்லை. அவர் குடியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடும் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கைது
இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த 16-ந் தேதி 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குமாரை பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குமாரை கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குமார் குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா சென்று குமாரை பிடித்து கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான குமார் ரூ.2 கோடி வரை பொதுமக்களிடம் மோசடி செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
குமாரிடம் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், தங்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.