லால்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 2 காளைகள் சாவு; கிணற்றில் விழுந்த மற்றொரு காளை உயிருடன் மீட்பு
லால்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 2 காளைகள் செத்தன. கிணற்றில் விழுந்த மற்றொரு காளை உயிருடன் மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 666 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டின் போது, மதுரை மேலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட காளை சீறிப்பாய்ந்து சென்றதில் வாடிவாசல் அருகே உள்ள கிணற்றில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த காளை பரிதாபமாக இறந்தது. இதேபோல் அரியலூர் மாவட்டம் இலந்தகுடம் கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட காளையை அவிழ்க்க முயன்றபோது, காளையின் உரிமையாளரை கொம்பால் குத்தியது. இதனால் காளை உரிமையாளரின் பிடியில் இருந்து விலகி கயிற்றுடன் ஓடியது. இதில் கயிறு கழுத்தை இறுக்கியதில் காளை செத்தது. இதேபோல் ஒரு காளை அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. அந்த காளையை கிரேன்மூலம் உயிருடன் மீட்டனர். காயம் அடைந்த அந்த காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.