கிணற்றில் விழுந்த 2 கரடிகள் உயிருடன் மீட்பு

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த 2 கரடிகள் உயிருடன் மீட்கப்பட்டன.;

Update: 2023-03-28 17:17 GMT

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த 2 கரடிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

கிணற்றில் விழுந்த கரடிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் 2 கரடிகள் தண்ணீர் தேடி அருகே உள்ள அரங்கல் கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அங்குள்ள சிங்காரம் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 2 கரடிகளும் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து, கிணற்றில் இருந்து கரடிகளை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாகியும் கரடிகளை மீட்க முடியாததால், ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிணற்றின் அருகே செல்ல உரிய பாதை வசதி இல்லாத நிலையில் தீயணைப்பு வாகனம் அரங்கல்துருகம் அருகே நிறுத்தப்பட்டது.

கரடிகள் மீட்பு

அதைத் தொடர்ந்து, வனச்சரகர் இளங்கோ தலைமையிலான வனத்துறையினர் அந்த கிணற்றை சென்றடையும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாய்தளமான பாதையை ஏற்படுத்தினர். பின்னர், மறுமுனையில் வேரோடு பிடுங்கப்பட்ட பனைமரம் ஒன்றை இணைத்து, கரடிகளை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் அமைத்த பாதை வழியே மேலே வந்த ஒரு கரடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

கரடிகளை மீட்க வந்த தீயணைப்பு வாகனம் உரியபாதை இல்லாததால் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் நின்ற நிலையில், தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினருடன் இணைந்து மற்றொரு கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் மற்றொரு கரடியையும் மீட்டனர். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்