"அறை முழுவதும் ஆபாச போஸ்டர்" சினிமா ஆசையில் வந்தவர்களை வீடியோ எடுத்த கும்பல்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பெண்களை ஆபாச படம் எடுத்த 2 பேரை சேலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-09-03 01:55 IST

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் கனகா(வயது 32). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை இணையதளத்தில் தேடி வந்தார். அப்போது துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அந்த விளம்பரத்தில், சினிமா நிறுவன அலுவலகம், சேலம் ஸ்டேட் வங்கி காலனி என்று முகவரி இருந்தது. இதனைப் பார்த்த கனகா, அந்த அலுவலகத்துக்கு சென்று துணை நடிகை வாய்ப்பு கேட்டார். அங்கிருந்த 2 பேர், தாங்கள் தயாரிக்கும் படத்தில் துணை நடிகையாக நடிக்க வைக்க ரூ.30 ஆயிரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

போலீசில் புகார்

உடனே அந்த 2 பேரும், கனகாவை, தங்களது அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்த்துக் கொண்டனர். கடந்த 3 மாதங்களாக கனகா, அந்த அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லையாம். உடனே கனகா, தனக்கான சம்பளத்தை கேட்டார். அதற்கு அந்த 2 பேரும் கனகாவை மிரட்டி உள்ளனர்.

உடனே கனகா, சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஒரு அறையில் ஆபாச சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

ஆபாச படங்கள்

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அங்கிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்திரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரங்களை நம்பி, சினிமா மோகத்தில் வரும் பெண்களிடம் நடிகை ஆக்குவதாக ஆசை காட்டி ஆபாச படங்கள் எடுத்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

கனகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வேல்சத்திரியன், ஜெயஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்துள்ளனர்.சினிமா மோகத்தில் இருந்த ஏராளமான பெண்கள் இவர்களிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த லேப்டாப், செல்போன்களில் சில பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததால், பெண்களை வைத்து ஆபாச படம் தயாரித்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

பரபரப்பு

கைதானவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்