படப்பை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

படப்பை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-18 09:19 GMT

காஞ்சீபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு படப்பை அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையிலான போலீசார் படப்பை அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வஞ்சுவாஞ்சேரி அண்ணா சாலை செல்லும் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வேனில் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்ட 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகள் என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை செய்ததில் ஒளி முகமது பேட்டை பகுதியை சேர்ந்த அசேன் ரசாக் (வயது 36) சாகுல்அமீது ( 27) ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குறைந்த விலைக்கு கூடுவாஞ்சேரி, நந்திவரம் மற்றும் வஞ்சுவாஞ்சேரி அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி வந்து அதை காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்