ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் 2 பேர் கைது
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் 2 பேர் கைது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் செல்வராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வேகமாக வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த செல்வராஜ், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேர், ஏட்டு செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் அடித்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் செல்வராஜை தாக்கியது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மணி (வயது 27), அன்பு(19) உள்ளிட்ட 4 பேர் என்பதும், அவர்கள் நெய்வேலியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்ததும், தற்போது விருத்தாசலத்தில் உள்ள ஒரு பேக்கரிக்கு வேலை செய்வதற்காக வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, அன்பு ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரதீப், விஜய் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.