ஓட்டல் ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

நாமக்கல் ஓட்டல் ஊழியர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-17 18:45 GMT

ஓட்டல் ஊழியர் கொலை

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்குக்கு பின்புறம் சாலையோரமாக கடந்த 15-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது அருகில் மதுபாட்டில் ஒன்றும், பழங்களும் சிதறி கிடந்தன. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கண்ணன் (வயது33) என்பதும், நாமக்கல்லில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 2 மாதங்களாக ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இது தொடர்பாக நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ராமாபுரம்புதூர் குட்டைமேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் (22), எம்.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கவுதம் (29) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், கவுதம் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 15-ந் தேதி இரவு பணியை முடித்து விட்டு, குடிபோதையில் மீண்டும் மதுகுடிப்பதற்காக குவார்ட்டர் பாட்டிலுடன் கண்ணன் அந்த பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது சக்திவேல், கவுதம் ஆகிய இருவரும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வாக்குமூலம்

அவர்கள் பணம் பறிக்கும் நோக்கில் கண்ணனிடம் சோதனை நடத்தி உள்ளனர். பணம் இல்லாத நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு அவர்கள் இருவரும் கண்ணனை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் முற்றியதில் அருகில் கிடந்த கல்லை எடுத்து கண்ணன் மீது போட்டு அவரை கொலை செய்ததாக கைதான இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். கைதான இருவரும் நாமக்கல்லில் உள்ள பட்டறை ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்