அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

வேப்பனப்பள்ளி அருகே அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-20 19:00 GMT

டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனப்பள்ளிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் கிருஷ்ணன் (வயது 35) ஓட்டி வந்தார். கண்டக்டர் ராமலிங்கம் (42) மற்றும் பயணிகளும் பஸ்சில் இருந்தனர்.

இந்த பஸ் வி.மாதேப்பள்ளி கிராமத்தின் வழியாக சென்ற போது, அந்த வழியாக இறுதி ஊர்வலம் ஒன்று வந்தது. ஊர்வலம் கடந்து சென்ற போது டவுன்பஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் பூமாலைகளை பஸ்சின் மீது வீசியும், பஸ்சில் அடித்தப்படியும் சென்றனர்.

இதை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை அந்த ஊர்வலத்தில் சென்ற கும்பலில் 7 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில்...

இதனிடையே அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கப்படுவதை வீடிேயா எடுத்த ஒருவர் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இதனால் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் கண்டக்டரும், டிரைவரும் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று இரவு அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியதாக மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரவின் (24), சிவா (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்