குமரலிங்கத்தில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 49). இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பரை சந்திப்பதற்காக குமரலிங்கம் வந்துள்ளார். அப்போது உடுமலை-பழனி சாலையில் உள்ள உணவகத்தின் முன்புறம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைது
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து அதன் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை சுரண்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அது உணவகத்தின் முன் திருடப்பட்ட கண்ணபிரானின் மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் குமரலிங்கம் இந்திரா வீதியைச் சேர்ந்த அருள்ராஜ் (38) மற்றும் ஜாஹிர் உசேன் வீதியைச் சேர்ந்த பகவதி (27) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
=================
(பாக்ஸ் செய்தி)மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
எங்க மோட்டார் சைக்கிளை கொடுங்க சார்
கண்ணபிரானிடமிருந்த வண்டியின் புத்தகம், பதிவெண் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்திய போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.ஆனால் கடைசி வரைக்கும் திருடியதை ஒத்துக் கொள்ளாத 2 பேரும், 'அது எங்க வண்டி சார், கொடுங்க சார்..நாங்க கிளம்பணும்' என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர்.