ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு அ.தி.மு.க. பிரமுகர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு
சென்னை புளியந்தோப்பு நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 49). இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஒரு காலத்தில் சென்னையை கலக்கி வந்த இவர், எதிரிகளின் தாக்குதலை தவிர்க்க சென்னையை காலி செய்து விட்டு, வேலூர் மாவட்டம் போய்விட்டார். இருந்தாலும் இவரை போட்டுத்தள்ள எதிரிகள் காலம் பார்த்து காத்திருந்தனர். கடந்த மாதம் 18-ந் தேதி ஆற்காடு சுரேஷ், ஒரு வழக்கு விசாரணைக்காக, எழும்பூர் 10-வது கோர்ட்டில் ஆஜரானார்.
எழும்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்தபிறகு, அன்றைய தினம் மாலை பட்டினபாக்கம் சென்றார். அங்கு பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றார். அவருடன் மாதவன் என்ற கூட்டாளி ஒருவர் மட்டும் சென்றார். இந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த எதிராளிகள் காரில் பின் தொடர்ந்து வந்து ஆற்காடு சுரேசை வெட்டி சாய்த்து தீர்த்துக்கட்டி விட்டனர். அவருடன் வந்த மாதவனும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்தார்.
சிறையில் உருவான பகை
இந்த சம்பவம் தொடர்பாக பட்டினபாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரூ.2 கோடி நில பிரச்சினை தொடர்பாகவும், சிறையில் ஒன்றாக இருந்தபோது பகையாளியான ஜெயபால் (63), அவரது ஆட்கள் யமஹா மணி, சைதாப்பேட்டை சந்துரு ஆகியோர் முதலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வந்த காரை ஓட்டி வந்த மோகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த ரவுடிகளான செந்தில்குமார், முத்துக்குமார் ஆகியோர் அங்குள்ள கோர்ட்டில், இந்த வழக்கு தொடர்பாக சரண் அடைந்தனர். அவர்களும் தற்போது சிறையில் உள்ளனர்.
அ.தி.மு.க. பிரமுகர்கள் கைது
இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர்கள் இருவரும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவில், இவர்கள் இருவரும் இருப்பது உறுதியானது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் ஜோகன் கென்னடி (53), சுதாகர் பிரசாத் (34) ஆகும். கென்னடி சென்னை மாவட்ட பிரதிநிதி. ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர். முக்கிய குற்றவாளி ஜெயபாலின் தம்பி ஆவார். சுதாகர் ஆயிரம்விளக்கு 111-வது வட்ட செயலாளர் ஆவார். இவர்களும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஜெயபாலுக்கு உறுதுணையாக செயல்பட்டு உள்ளதாகவும், ஆற்காடு சுரேசை மோட்டார் சைக்கிளில் இவர்களும் பின்தொடர்ந்து வந்ததாகவும் போலீசார் கூறினார்கள். இதன் மூலம் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு பெரும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.