வேறொருவரின் நிலத்தை விற்று ரூ.19½ லட்சம் மோசடி
வேறொருவரின் நிலத்தை விற்று ரூ.19½ லட்சம் மோசடி செய்ததாக பெண் புகார் செய்துள்ளார்.;
வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் சோபினி (வயது 46). இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் எங்களுக்கு சொந்தமான வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு விற்பனை செய்தோம். அதில் கிடைத்த பணத்தில் அ.கட்டுப்படியில் வீட்டுமனை வாங்க திட்டமிட்டிருந்தோம். அப்போது தொரப்பாடியை சேர்ந்த ஒருவர் என்னை அணுகி அ.கட்டுப்படியில் தனக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளை விற்பனை செய்ய உள்ளேன் என்றார். அந்த வீட்டுமனைகளுக்கு ரூ.19½ லட்சம் கொடுத்து அக்ரிமெண்ட் பத்திரத்தில் அவரிடம் எழுதி வாங்கினோம். 3 மாதங்களுக்கு பின்னர் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம் சென்று அந்த இடம் குறித்து விசாரித்தோம். அப்போது அந்த இடம் வேறு நபருக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தை ஏமாற்றி என்னிடம் விற்று மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் பணம் கேட்டதற்கு கொடுக்க மறுத்தத்துடன் மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.