அரியலூர் மாவட்ட ஏரிகளை தூர்வாரினால் 18 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கலாம்-அன்புமணி ராமதாஸ் பேச்சு

அரியலூர் மாவட்ட ஏரிகளை தூர்வாரினால் 18 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கலாம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-10-30 18:37 GMT

அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று 2-வதுநாள் நடை பயணத்தை அரியலூரில் தொடங்கினார். பின்னர் அவர் அரியலூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

சோழ மன்னர் காலத்தில் மிகப்பெரிய ஏரிகளை உருவாக்கி அரியலூர் மாவட்டத்தையே செழிக்க வைத்திருந்தார்கள். இன்று அரியலூர் என்று கூறினாலே வறட்சி, விவசாயம் இல்லாத, குடிநீர் இல்லாத மாவட்டம் என்ற பெயரும் உண்டு. இதனை மாற்றி அமைக்க, அரியலூர் சோழர் பாசன திட்டத்தினை நிறைவேற்றினால், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செழிப்பை பெரும். வேளாண் சார்ந்த மண், குடிநீர், வேலைவாய்ப்புக்கு பிரச்சினை இல்லாத மகிழ்ச்சியான மண்ணாக மாறும்.

இன்று பல ஆறுகள் காணாமல் போய்விட்டது. அதனை மீண்டும் மீட்டெடுத்து தூர்வாரி தண்ணீரை பாய்ச்ச வேண்டும். காவேரி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து நமக்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ளலாம். கடந்த 5 மாதங்களில் 430 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அரியலூர் மாவட்ட ஏரிகளை தூர்வாரி தண்ணீர் சேமித்தால் 18 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம். கடலில் வீணாக கலக்கும் நீரை எப்படியாவது இங்கு கொண்டு வர வேண்டும். அன்றைய காலங்களில் சோழர்கள் வெட்டிய மருதையாறு அரியலூருக்கு வரும் ஆறு, இன்று அது எங்கு இருக்கிறது தெரியவில்லை. நந்தியாறும் காணவில்லை. அரியலூரில் வடக்கு பகுதியில் சின்னாறு, வெள்ளாறு உள்ளது. இதனை தூர்வார வேண்டும். தடுப்பணை வேண்டும். கொள்ளிடத்திலும் தடுப்பணை வேண்டும்.

காவேரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க 5 ஆண்டுகளாக போராடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளை தெரிவித்து மக்களுக்காக போராடி வருகிறோம். அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுங்கள். அது நிறைவேறவில்லை என்றால் போராட்டம் செய்வோம். நமது மண்ணில் நாம் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்