கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர், சூளகிரி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா வைத்திருந்த நாரலப்பள்ளியை சேர்ந்த திம்மராயன் (வயது55), ஓசூர் காமராஜ் நகரை சேர்ந்த மனோஜ்குமார் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி-குட்கா
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காமராஜ் (45) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல மாவட்டத்தில் மளிகை, பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சிங்காரப்பேட்டை, மத்தூர், போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.