கேரளாவுக்கு அதிகபாரம் ஏற்றிச்சென்ற 18 லாரிகள் பறிமுதல் ரூ.6 லட்சம் அபராதம்

கேரளாவுக்கு அதிகபாரம் ஏற்றிச்சென்ற 18 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.;

Update: 2023-06-05 17:30 GMT

களியக்காவிளை:

குமரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறைக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு-பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கக்கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் குழித்துறை சந்திப்பு பகுதியில் தனிப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒன்றின் பின் ஒன்றாக 18 லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தன. உடனே போலீசார் அவற்றை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அந்த லாரிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த லாரிளின் ஆவணங்களை பரிசோதனை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்