கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,752 கோடி நிர்வாக ஒப்புதல் கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1,752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-07-27 19:00 GMT

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1,752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நேரில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பாதுகாக்கப்பட்ட குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுக்குடிநீர் திட்டம்

அதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்த மொத்தம் ரூ.1,752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிதி ஆதாரம் தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவியின் கீழ் ரூ.1537.59 கோடி மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.215.14 கோடி ஆகும். குளித்தலை அருகில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு இந்த கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் முடிவுறும் தருவாயில் தற்கால மக்கள் தொகையின்படி 11.39 லட்சம் மக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் அளவிலும், இடைக்கால (2036) மக்கள் தொகையின்படி 13.56 லட்சம் மக்களுக்கு 69.50 மில்லியன் லிட்டர் அளவிலும் மற்றும் உச்சகால (2051) மக்கள் தொகையின்படி 16.11 லட்சம் மக்களுக்கு 86.42 மில்லியன் லிட்டர் அளவிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டப்பணிகள்

மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக, சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தேனம்மாள்பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ளள வுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியையும், 1,118 மிமீ இரும்பு குழாய் பதிக்கும் பணியையும் மற்றும் தி.சூரக்குடியில் பிரதான மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவைகளின் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

385 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகளில் 369 முடிக்கப்பட்டும், 758 மேல்நிலைத் தொட்டிகளில் 537 முடிக்கப்பட்டும், 391 விசைப்பம்பு அறைகளில் 304 முடிக்கப்பட்டும், எஞ்சியுள்ள தொட்டிகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சிவகங்கை திட்டக்கோட்ட நிர்வாக பொறியாளர் நிர்மலா, திட்டக்கோட்ட உதவி நிர்வாகப்பொறியாளர் ஜான்சிராணி, மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வாகப்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பூமிநாதன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்