வேலை வாங்கி தருவதாக கூறி முகநூல் மூலம் ரூ.1,74,000 மோசடி-திருச்சியை சேர்ந்தவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி முகநூல் மூலம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
வேலை வாங்கி தருவதாக கூறி முகநூல் மூலம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வேலை வாங்கி தருவதாக...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் செல்லத்துரை.
இவர் முகநூலில் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுப்பதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கூறியுள்ளார். அதில் பேசிய நபர் வெளிநாட்டில் வேலை வேண்டுமென்றால் அதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மோசடி
இதனை நம்பி அவரது கூகுள் பே கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.1,74,000 செல்லத்துரை அனுப்பி உள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் ஆகவே செல்லத்துரை தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதன்பிறகு அந்த நபர் தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டார். இதனால் செல்லத்துரை அந்த எண்ணிற்கு கூப்பிடும் போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதைத் தொடர்ந்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த செல்லத்துரை தென்காசி சைபர் கிரைம் போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.
கைது
சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த மோசடியில் ஈடுபட்டவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு கிராமத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவர் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் தலைமையில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) செண்பக பிரியா மற்றும் சைபர் கிரைம் போலீசார் திருச்சி சென்று கணேஷை கைது செய்தனர்.