கலை சங்கமம்: ஒவ்வொரு ஆண்டும் 160 நிகழ்ச்சிகள் நடத்தப்படும்; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்களில் கலைச்சங்கமம் என்ற பெயரில் கலை விழாக்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

Update: 2022-09-23 03:08 GMT

சென்னை:

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'கலை சங்கமம்' நிகழ்ச்சிகளின் தொடக்க விழா, சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா, கலைப்போட்டியில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் திறந்த வெளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனைப்படைத்த 15 கலைஞர்களுக்கு தமிழக அரசின் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுகளை வழங்கினார்.

சென்னை மாவட்டத்தில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ' தமிழ்நாட்டின் அரிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு சென்று அவற்றை வளர்க்கவும், கலை வாய்ப்புகளை வழங்கி கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 160 கலை நிகழ்ச்சிகளை கலை சங்கமமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. சென்னையில் தற்போது நடைபெற்ற தொடக்க விழாவை தொடர்ந்து, இந்த விழா ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருங்காட்சியகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்கள் மூலம் நடத்தப்படும்.' என்றார்.

விழாவில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சே.ரா.காந்தி வரவேற்று பேசினார். சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ. பரந்தாமன், அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்