சமயபுரம் மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள்

சமயபுரம் மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தன.;

Update:2023-10-15 03:40 IST

சமயபுரம்:

அம்மனை தரிசிக்க...

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி, விரதம் இருந்து வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இரவில் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அதிகாலையில் நடை திறக்கும் நேரத்தில் அம்மனை வணங்கினால் மிகவும் சிறப்பு என்பதால், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்வார்கள்.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

இந்நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் மூலம் சமயபுரத்தில் குவிந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தையை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும் கோவிலை வலம் வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் கோவிலுக்கு முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் தீபமேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

சிறப்பு அபிஷேகம்

மகாளய அமாவாசையையொட்டி நேற்று மாலை 4.15 மணிக்கு உற்சவர் மண்டபத்தில் உற்சவ அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், எலுமிச்சை சாறு, சாத்துக்குடி சாறு, மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி, கடைவீதி வழியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி உற்சவர் மண்டபத்தில் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், மணியக்காரர் பழனிவேல், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் கோவில் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து, கோவிலுக்குள் அழைத்து சென்று அம்மனை தரிசனம் செய்த பின்னர், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.

அம்மன் கோவில்களில்...

இதேபோல் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில், சமயபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகாளய அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்