அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட16 கிலோ கஞ்சா பறிமுதல்

உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட16 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது;

Update: 2023-02-15 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

ஆந்திராவிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக தேனீக்கு கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வந்த அரசு பஸ்சை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 2 பெரிய பையுடன் வந்தவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது பையில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 2 பைகளிலும் தலா 8 கிலோ வீதம் மொத்தம் 16 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்த நபரை உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த பாபு நாயுடு என்கிற பெத்தல நாயுடு(வயது 48) என்பதும், ஆந்திராவில் இருந்து தேனிக்கு 3-வது முறையாக கஞ்சா கடத்தி செல்ல முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பெத்தல நாயுடுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 16 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா கடத்தி வந்தவரை பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்