எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நடந்த எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் காளைகள் முட்டி 16 பேர் காயம் அடைந்தனர்.
எருது விடும் திருவிழா
கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் அருகே அனுயம்பட்டி பகுதியில் எருது விடும் திருவிழா நடந்தது. அதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. எருது விடும் திருவிழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. எருதுகளை கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் பரிசோதனை செய்தார். அதில் 2 எருதுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டன.
எருது விடும் திருவிழாவை ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜி.மோகன்குமார் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராணிசின்னகண்ணு வரவேற்றார். வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
51 பரிசுகள்
வாடிவாசலில் இருந்து எருதுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. எருதுகள் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் எருதுகளை உற்சாகப்படுத்த கைகளால் தட்டிக் கொடுத்தனர். சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகள் முட்டி 16 பேர் காயம் அடைந்தனர்.
குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த எருதுகளுக்கு முதல் பரிசாக ரூ.66 ஆயிரத்து 666-ம், 2-வது பரிசாக ரூ55 ஆயிரத்து 555 என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞரணியினர், எருது விடும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.