15,740 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15,740 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். 695 பேர் தேர்வு எழுதவில்லை.;
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் மொழித்தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 8,239 மாணவர்கள், 8,164 மாணவிகள் என 16,403 பேரும், தனித்தேர்வர்கள் 365 பேரும் என மொத்தம் 16,768 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
தனிதேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தது.
15,740 பேர் எழுதினர்
நேற்று நடந்த மொழித்தேர்வை 7,842 மாணவர்கள், 7,898 மாணவிகள் என 15,740 பேர் தேர்வு எழுதினர். 397 மாணவர்கள், 266 மாணவிகள் என 663 பேர் நேற்று தேர்வை எழுதவில்லை. இதேபோல் தனித்தேர்வர்களில் 236 மாணவர்களும், 97 மாணவிகளும் தேர்வு எழுதினர். 29 மாணவர்கள், 3 மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்படை தடுக்க 133 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தத பொதுத்தேர்வை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தாசில்தார் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.