15 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
ஈரோட்டில், 15 ரேஷன் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
ஈரோட்டில், 15 ரேஷன் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வழங்க, தோட்டக்கலை துறை மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் மட்டும் தக்காளி கொள்முதல் செய்து, ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலம் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கிடைக்காததால் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கூட்டுறவு துறை மூலம் மாநில அளவில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய அரசு அறிவித்தது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் 15 கடைகளில் தக்காளி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
15 ரேஷன் கடைகள்
இதற்காக ஈரோடு மாவட்டம் தாளவாடி, கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து நேற்று முன்தினம் ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள 2 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் தாளவாடி, கர்நாடகா மாநிலம் மாண்டியா, மைசூரு, கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த தக்காளி, ஈரோடு பெரியார் நகர், கருங்கல்பாளையம், திருநகர் காலனி, சேட் காலனி, ஆசிரியர் காலனி, ஜெகநாதபுரம் காலனி, ஜெகநாதபுரம் பாரதி வீதி, சூரம்பட்டிவலசு, பழையபாளையம், சங்கு நகர், அணைக்கட்டு, கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம், மூலப்பாளையம், பாரதிபுரம், நாடார்மேடு ஆகிய 15 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.