(செய்திசிதறல்) மணப்பாறை அருகே வாய்க்கால் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயம்
மணப்பாறை அருகே வாய்க்கால் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.;
மணப்பாறை அருகே வாய்க்கால் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.
மோதல்
மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள எண்டபுளி அருகே உள்ள கோசிப்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் ராசு (வயது 60), ராமன் (50). இவர்கள் இருவருக்கும் இடையே வாய்க்கால் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் 2 தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் ராசு தரப்பில் 8 பேருக்கும், ராமன் தரப்பில் 7 பேருக்கும் காயம் ஏற்பட்டு மணப்பாறை, திருச்சி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் புத்தானத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த ஆண்டிசாமி (40), வெள்ளையம்மாள் (50), மலர் (45) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைது
*மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (23). இவர் மணப்பாறை பஸ் நிலையத்தில் திருச்சி செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது, அவரது சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ சிவகங்கை மாவட்டம், ஆரவயல் சண்முகநாதபுரத்தை சேர்ந்த கணேசன் (38) என்பவர் திருடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மதுபோதையில்...
* வையம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நின்று அனுக்கானத்தம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (29), சத்தியராஜ் (24) ஆகியோர் மதுபோதையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்தனர். இதை கண்டித்த போலீஸ்காரர் சம்பத் குமாரையும் ஆபாசமாக பேசினர். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
காட்டெருமை சாவு
*மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து அதே இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது காட்டெருமைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டதில் காயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என்றனர்.
மனமகிழ் மன்றத்தில் அதிகாரிகள் ஆய்வு
*திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே கடைவீதி பகுதியில் மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று இங்கு துணை கலெக்டர் மற்றும் கலால் துறை அலுவலர்கள் நேரடியாக வந்து போலி மதுபானம் விற்பனை நடைபெறுகிறா? சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்று ஆய்வு செய்தனர்.