பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில்உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு 'சீல்'
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு சீல் வைத்து கலால்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு சீல் வைத்து கலால்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கலால்துறை அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மதுபான பார்களில் நேற்று கோவை தெற்கு மாவட்ட கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 15 மதுபான பார்கள் உரிய அனுமதி இன்றி செயல்பட்டது தெரியவந்தது.
15 மதுபான பார்களுக்கு 'சீல்'
இதையடுத்து அந்த 15 மதுபான பார்களுக்கும் கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில் குறிப்பிடும்படியாக கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான பார்களிலும் கலால் துறை தாசில்தார் விஜயகுமார், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தியேட்டர் அருகே உள்ள மதுபான பார், ஆர்.எஸ்.ரோட்டில் உள்ள மதுபான பார் ஆகிய 2 பார்களும் உரிமம் இல்லாமல் செயல்படுவது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்த 2 மதுபான பார்களின் செட்டரை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். மதுக்ககடை அருகில் உள்ள பார்கள் திடீரென மூடப்பட்டதால் சாலையோரம் நின்றபடி சிலர் மது அருந்தி சென்றனர்.