முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாட்டு பயணம்

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

Update: 2024-01-08 13:49 GMT

சென்னை,

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்று பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு வழிகளை முதல்-அமைச்சர் வகுத்துத் தந்துள்ளார். தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி பரவலாக இருக்கும்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்துறைக்கு முதல்-அமைச்சர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள புதிய முதலீடுகளால் லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழககத்தில் மேலும் பல முன்னணி தொழிற்சாலைகள் வருவதற்கு இந்த மாநாடு வழிகோலியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பேட்டரி உற்பத்தி போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக வேறு பல நாடுகளுக்கு தொழில்துறை அதிகாரிகளை முதல்-அமைச்சர் அனுப்பி வைத்திருந்தார். அவரே யு.ஏ.இ., சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தார். அதன் விளைவைத்தான் நாம் இங்கு காண்கிறோம். பல நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

இன்னும் சில நாட்களில் தொழில்துறையினர் லாவோஸ் செல்லவுள்ளோம். 28-ந் தேதி எங்களுடன் முதல்-அமைச்சர் ஸ்பெயினுக்கு வரவுள்ளார். பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடு வருகிறது? என்பது மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கு எத்தனை தரமுள்ள வேலை வாய்ப்புகள் குறிப்பாக பெண்களுக்கு கிடைக்கின்றன? என்பதையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்