144 தடை உத்தரவு பிறப்பிப்பு: 150 போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நேரடி நெல் விதைப்பு....!
குத்தாலம் அருகே 150 போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.;
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27-ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் பருத்திக்குடி கிராமத்தில் 3 விவசாயிகள் இன்று 18 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடிவு செய்தனர்.
போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட 1 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் 3 துணை சூப்பிரண்டு, 8 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 144 தடை உத்தரவால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.