தமிழக நீர்த்தேக்கங்களில் 143 டி.எம்.சி. நீர் இருப்பு நீர்வளத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் 143 டி.எம்.சி. நீர் உள்ளதாக தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.;

Update: 2022-06-22 18:47 GMT

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை இயல்பான மழை அளவை காட்டிலும் 85 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 20-ந்தேதி வரை 65.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களில் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் முக்கியமாக உள்ள 90 நீர்த்தேக்கங்கள் மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த நீர்த்தேக்கங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி (224.297 டி.எம்.சி.) ஆகும். ஆனால் தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 621 மில்லியன் கன அடி (143.621 டி.எம்.சி.) மட்டுமே கையிருப்பு உள்ளது. இது 64.03 சதவீதமாகும்.

நிரம்பிய நீர்த்தேக்கங்கள்

இதில் சென்னை மண்டலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தனா, கோவை மண்டலத்தில் உள்ள வரட்டுப்பள்ளம், வர்தமாநதி ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. இதுதவிர சென்னை மண்டலத்தில் உள்ள செம்பரம்பாக்கம் 97.12 சதவீதமும், புழல் 94.45 சதவீதம், பாம்பாறு 90 சதவீதம், மதுரை மண்டலத்தில் குண்டாறு 95.01 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் 50 முதல் 70 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

அதேபோல் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 25.6 மில்லி மீட்டரும், பூண்டி 36, சோழவரம் 42, புழல் 58, செம்பரம்பாக்கம் 28, வீராணம் 10 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 ஆயிரத்து 485 மில்லியன் கன அடி (8.4 டி.எம்.சி.) சேமிக்கப்பட்டு உள்ளது. போதிய நீர் ஏரிகளில் இருப்பதால் சென்னை மாநகருக்கு 974 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவலை நீர்வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்