லாரியில் மணல் கடத்திய 6 பேருக்கு 14 ஆண்டு சிறை

களியக்காவிளையில் லாரியில் மணல் கடத்த முயன்ற வழக்கில் 6 பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2022-08-11 17:58 GMT

களியக்காவிளை:

களியக்காவிளையில் லாரியில் மணல் கடத்த முயன்ற வழக்கில் 6 பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மணல் கடத்த முயற்சி

கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் ஏட்டு தங்கராஜ் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, மணல் கடத்தி வந்த ஒரு லாரி சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிமீது மோதி ேசதப்படுத்தியது. மேலும் அங்கு பணியில் இருந்த ஏட்டு தங்கராஜ் மீதும் அந்த லாரி மோதியதில் அவர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் சோதனை சாவடியில் நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. மணல் கடத்தி சென்ற லாரி அங்கு நிற்காமல் சென்று விட்டது.

14 ஆண்டு சிறை

இதுதொடர்பாக திக்குறிச்சியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோணி(வயது41), தங்கப்பன் மகன் அருள் (39), அன்பையன் மகன் பாபலேயன்(43), சின்னப்பன் மகன் விஜயகுமார்(40), கப்ரியல் மகன் ஜெகன் (40), ராமகிருஷ்ணன் (40), ஆகிய 6 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை குழித்துறை கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 6 பேருக்கும் 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராபி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்