சிதம்பரம் அருகே தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 14 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏதுவாக பள்ளி சார்பில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று காலையில், பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பி.முட்லூர் வழியாக பள்ளிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
இதைகவனித்த டிரைவர் முருகன், பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது பஸ் என்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், உடனடியாக பஸ்சில் இருந்த 14 மாணவர்களையும் பத்திரமாக கீழே இறக்கினார். மேலும் அவர்களுடைய புத்தகப்பையையும் பஸ்சில் இருந்து எடுத்து சாலை ஓரமாக வைத்தாா்.
இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.
டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு மாணவர்களை இறக்கிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.
தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.