ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 14 பவுன்நகை திருட்டு
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 14 பவுன்நகை திருட்டு
தாராபுரம்,
தாபுரத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் இருந்து 14 பவுன் நகையை பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
14 பவுன்நகை திருட்டு
தாராபுரத்தை அடுத்த எல்லப்பன்நாயக்கன் வலசை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருடைய மனைவி மனோன்மணி (வயது 60). தம்பதி இருவரும் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து மதியம் ஈரோடு செல்லும் அரசு பஸ்சில் ஏறி தாராபுரம் பஸ் நிலையம் வந்து இறங்கினார்கள். மனோன்மணி தனது கை பையில் 14 பவுன் நகையை வைத்திருந்தார்.
பின்னர் தம்பதி இருவரும் தாராபுரத்தில் இருந்து மதுக்கம்பாளையம் செல்லும் பஸ்சில் எல்லப்ப நாய்க்கன் வலசு செல்ல ஏறினார்கள். அந்த பஸ் எல்லப்ப நாய்க்கன் வலசு வந்ததும் இருவரும் இறங்கினர். அப்போது மனோன்மணி தனது கை பையினுள் வைத்திருந்த மற்றொரு சிறிய பை (மணி பர்ச்சை) காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அந்த பையில்தான் 14 பவன் நகையை வைத்திருந்தார்.
போலீசில் புகார்
பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் மனோன்மணி நகை வைத்திருந்த பர்சை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் தாராபுரம் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருமண நிகழ்ச்சிக்கு சென்று வரும்போது பெண்ணிடம் இருந்து 14 பவுன் நகையை மர்மஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.