குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 14 பேர் கைது

Update: 2023-09-04 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக 23 பேர் பிடிபட்டனர்.

கஞ்சா, லாட்டரி விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர், மத்திகிரி, சூளகிரி, தளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,540 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மோட்டூர் ஜங்ஷன் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பெயர் தமிழரசன் (வயது 30), கிருஷ்ணகிரி கனகமுட்லு பக்கமுள்ள பெரியமோட்டூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா

அதேபோல மாவட்டத்தில் எங்கு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் குட்கா விற்பனை செய்ததாக ஓசூர், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,650 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாடுகிறார்களா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் சிங்காரப்பேட்டை, மத்தூர், நாகரசம்பட்டி, குருபரப்பள்ளி, ஓசூர் சிப்காட், சூளகிரி, தளி, ராயக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,080 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்