ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
ஓடும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தீவிர வாகன தணிக்கை
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், ரெயில்வே போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காட்பாடி ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், போலீசார் ரங்கன், சுதர்சன் ஆகியோர் ஹவுராவில் இருந்து யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சித்தூரில் இருந்து சோதனை செய்து வந்தனர்.
கஞ்சா பறிமுதல்
அப்போது பயணிகளின் இருக்கைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை சோதனை செய்தனர். அதில் 9 பண்டல்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 14 கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதனை கடத்தி வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் குடே (வயது 23) என்றும், சொந்த ஊரிலிருந்து வேலை செய்யும் ஓசூருக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை காட்பாடி ரெயில் நிலையத்தில் இறக்கி 14 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாவிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவுசெய்து கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர் அபிஷேக்குடேவை கைது செய்தனர்.