மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 136 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 136 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-07 19:30 GMT

விலைவாசி உயர்வு

நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், அதிகரித்து வரும் வேலையின்மைக்கும் காரணமான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா தலைமையிலான நிர்வாகிகள் அரியலூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

136 பேர் கைது

ஜெயங்கொண்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலான கட்சியினர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் 22 பெண்கள் உள்பட 63 பேரை கைது செய்தனர். ஆண்டிமடத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையிலான நிர்வாகிகள் கடை வீதியிலிருந்து ஊர்வலமாக வந்து தபால் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டு கைதான 136 பேரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்