மது, போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் 1,307 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது, போதைபொருள் தடுப்பு நடவடிக்கையில் கடந்த 4 மாதத்தில் 1,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-10 18:17 GMT

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடுப்பு நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்த சோதனையில் 1,355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 10,011 லிட்டர் சாராயம், 3,357 லிட்டர் கர்நாடகா மது பாட்டில்கள், 1,342 லிட்டர் மது பாட்டில்கள், 75,100 லிட்டர் சாராய ஊறல், 21 கிலோ கஞ்சா, 218 கிலோ புகையிலை பொருட்கள், மது மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள் 3, இரு சக்கர வாகனம் 14 கைப்பற்றப்பட்டது.

1,307 பேர் கைது

மேலும் 1,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 160 பேர் மீது 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.28,470 பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் சூதாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட குற்றவாளிகள் குறித்த தகவலை 9159959919 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்