ஓமன் நாட்டில் சிக்கி தவித்த தமிழகத்தைசேர்ந்த 13 பேர் சென்னை வந்தனர்

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த தமிழகத்தைச்சேர்ந்த 13 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்.;

Update: 2023-02-16 07:08 GMT

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், கமுதியை சேர்ந்த செல்வம் வழிவிட்டான், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ் பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த முத்துகருப்பன் உலகன், சுந்தரேசன் அம்மாசி, ராஜ்குமார் கணேசன், கருப்பையா மாயாண்டி, மதுரை மேலூரை சேர்ந்த கருப்பையா முனியாண்டி, கருப்பையா பிச்சன், பாண்டி அழகன், சேகர் சேவகமூர்த்தி, நடராஜன் அழகப்பன், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு சின்னையன் ஆகியோர் தனியார் முகவர்கள் மூலமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓமன் நாட்டுக்கு வேலைக்காக சென்றனர்.

ஆனால் அங்கு உறுதியளித்தபடி அவர்களுக்கு வேலை மற்றும் ஊதியம், போதுமான உணவு வழங்காமலும், தனி அறையில் அடைத்துவைத்து துன்புறுத்தப்படுவதாகவும், எனவே ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் அவர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் என 13 பேரின் குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் நல ஆணையரகம் மூலம் அவர்களை மீட்டு வர உத்தரவிட்டார். அதன்படி ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி 13 பேரும் மீட்கப்பட்டனர்.

பின்னர் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக விமான டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டு 13 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர்களை அயலகத் தமிழர் நல ஆணையரக அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் 13 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழக அரசு ஏற்பாடு செய்த வேன் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓமன் நாட்டில் இருந்து தங்களை மீட்டு அழைத்து வந்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்