தென்காசி மாவட்டத்தில் 1,289 பள்ளிக்கூடங்கள் திறப்பு; மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை
தென்காசி மாவட்டத்தில் நேற்று 1289 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.;
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 1.289 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளிகளான 309 தொடக்கப் பள்ளிகள், 65 நடுநிலை பள்ளிகள், 26 உயர்நிலை பள்ளிகள், 53 மேல்நிலை பள்ளிகள் ஆக மொத்தம் 453 பள்ளிகள் உள்ளன. மேலும் 513 அரசு உதவிபெறும் பள்ளிகள், 56 பகுதி நேர அரசு உதவிபெறும் பள்ளிகள், 226 மெட்ரிக் பள்ளிகள், 22 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆக மொத்தம் 1,289 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் நேற்று காலை திறக்கப்பட்டன.
பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியன சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் முன்னதாகவே காலையில் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தனர். பள்ளிக்கு மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.
உற்சாகத்தை அளிக்கிறது
தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் மாரி பாலமுருகன் கூறியதாவது:-
நான் 9-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பிற்கு செல்கிறேன். விடுமுறையை நன்றாக கழித்துவிட்டு பள்ளிக்கு சந்தோஷமாக வந்துள்ளேன். பள்ளிகள் இப்போது திறந்தது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. பத்தாம் வகுப்பிற்கு நான் எப்படி படிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் தெளிவாக கூறியுள்ளனர். நான் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிகுந்த மகிழ்ச்சி
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சக்தி பிரியா என்பவர் கூறுகையில், "பள்ளிகள் திறந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.