121 கி.மீ. வேகத்தில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம்
திருத்துறைப்பூண்டி--பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது.;
பட்டுக்கோட்டை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில்பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி முதல் 11.25 மணிக்குள்ளும், திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதையில் நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குள்ளும்
தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ். அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த ரெயில் மணிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.
செல்பி எடுக்க கூடாது
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடப்பது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரெயில்வே கேட் வழியாக நடந்து செல்ல கூடாது.
இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரெயில் அருகில் சென்று செல்போன் மூலம் செல்பி மற்றும் வீடியோ எடுப்பது ஆகிய செயல்களை தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
ரெயில் தண்டவாளம் அருகில் செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதையிலும், திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதையிலும் ஏற்கனவே ரெயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.