திருச்சியில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-07 19:55 GMT

ரகசிய தகவல்

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே வாகனங்களில் சிலர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்பேரில் திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

11 டன் ரேஷன் அரிசி

விசாரணையில் அவர்கள் தென்னூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன், பொன்மலையை சேர்ந்த சேக் முக்தார், சீனிவாசன் நகரை சேர்ந்த முத்துக்குமார், அரியமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரன், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திருச்சி தென்னூரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததும் அதனை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சரக்கு வாகனங்கள், ஒரு மினி லாரி மற்றும் 11 டன் ரேஷன் அரிசி, ரூ.82 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பாபு என்கிற சாதிக் பாட்ஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

சமயபுரம்

இதேபோல் சமயபுரம் அருகே ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது 27 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்